"கொத்திய" பாம்பை கொன்ற சிறுவன்.. சிறுவனுக்கு மறுபிறவி அளித்த மருத்துவர்கள்..!
கொடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவனுக்கு மறு ஜென்மம் கொடுத்துள்ளனர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள். “இளம் கன்று பயமறியாது” என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில், தன்னைக் கடித்த பாம்பை அடித்துக் கொன்று பெற்றோரிடம் கொண்டு வந்து காண்பித்து அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறான் சிறுவன்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், ஏகனாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமு - அனுசுயா தம்பதியின் 7 வயது மகன் தர்ஷித். கடந்த 16 ம் தேதி வீட்டின் அருகே இருந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, சுருக்கென்று வலது காலில் ஏதோ தீண்டியதை தர்ஷித் உணர்ந்துள்ளான்.
கீழே பார்த்தபோது அது பாம்பு என்பது தெரியவந்திருக்கிறது. “இளம் கன்று பயமறியாது” என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில் அருகில் கிடந்த கொம்பு ஒன்றை எடுத்து பாம்பை அடித்தே கொன்றிருக்கிறான் தர்ஷித். பின்னர் பாம்பின் உடலை அந்தக் கொம்பிலேயே தூக்கிக் கொண்டு வந்து பெற்றோரிடம் காண்பிக்கவே, அவர்கள் அதிர்ச்சியடைந்து அவனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாம்பின் உடலையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். அது கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என்பதை தெரிந்துகொண்ட மருத்துவர்கள், பாம்பு தீண்டிய அறிகுறியே இல்லாமல் நின்றுகொண்டிருந்த சிறுவனுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர்.
பொதுவாக விஷப்பாம்புகள் தீண்டினால் 3 லிருந்து 4 மணி நேரத்துக்குள் இரத்தம் உறையும் தன்மையை இழந்து, மூக்கு அல்லது வாய் வழியாக வெளியேறி உடலில் விஷம் இருப்பதைக் காட்டிக் கொடுத்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் 2 நாட்கள் கடந்த நிலையில்தான் தர்ஷித்துக்கு நாடித் துடிப்பும் இரத்த ஓட்டமும் குறைந்து இருக்கிறது.
இதனையடுத்து 18ஆம் தேதி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக "ஆண்ட்டி ஸ்னேக் வெனோம்" என்ற மருந்தை உடலில் செலுத்தி, தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர் மருத்துவர்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வார சிகிச்சைக்கு பின் உடல் நலம் பெற்ற மகனை அழைத்து கொண்டு, மருத்துவர்களுக்கு நன்றி கூறி வீடு திரும்பியுள்ளனர் பெற்றோர்.
பாம்பு கடித்ததும் பயமோ, பதற்றமோ கொள்ளக் கூடாது என்று கூறும் மருத்துவர்கள், அதேநேரம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது என்கின்றனர். கிராமங்களில் வயல் வெளிகளில் பாம்பு தீண்டியதும் அது வெறும் தண்ணீர் பாம்பாக இருக்கும் என எண்ணி சிலர் அலட்சியம் செய்துவிடுகின்றனர் என்றும் உடலில் விஷம் முழுவதுமாகப் பரவி பிரச்சனைகளை ஏற்படுத்திய பின் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
பாம்பு கடித்ததும் சினிமாக்களில் வருவதுபோல் கடித்த இடத்தை இறுக்கிக் கட்டுவது கூடாது என்று கூறும் மருத்துவர்கள், அது ரத்த ஓட்டத்தை பெரிதாக பாதித்து வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர். மாறாக அது காலோ, கையோ, கடிபட்ட உறுப்பு அசையாதவாறு பார்த்துக்கொண்டு உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்கின்றனர்.
பாம்புக் கடியால் உலகம் முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை இறக்கிறார்கள் என்றும் தாமதம் செய்யாமல் உரிய நேரத்தில் மருத்துவமனையை நாடும் பட்சத்தில் இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Comments